என்னை நேசித்த மண்ணுக்கும் மக்களுக்கும் நான் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என்று வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இருந்து பிணையில் விடுதலையாகி வெளியில் வந்த கமலேந்திரன் அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
‘நான் 23 வருடமாக இந்த மண்ணுக்கு சேவையாற்றினேன். தற்போது தவிர்க்க முடியாத சூழல் காரணமாக இந்த மண்ணை விட்டு வெளியேறுகிறேன். ஆனால் இம்மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் வருவேன்.
என்னை ஆதரித்த மக்களுக்கும் நான் நேசித்த மண்ணுக்கும் நிச்சயமாக நான் கடமை செய்வேன். அதற்கான சகல வல்லமையும் இறைவன் எனக்கு தருவான். என்னை இந்த விடயத்தில் இருந்து மீட்ட சட்டத்தரணிக்கும் என்னை இதுவரையில் பராமரித்த நீதிமன்றத்துக்கும் நன்றி கூறுகின்றேன்.
நல்ல நிலத்தில் விழுந்த விதை ஒரு நாளும் கெட்டுப் போகாது. மாறாக அது நல்ல பலனை தான் தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.