பனைசார்ந்த உற்பத்திகள் எதிர்காலத்தையும், சந்தை வாய்ப்பையும் நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

பனைசார்ந்த உற்பத்திகள் எதிர்காலத்தை நோக்கியதாகவும் உள்ளூர் வெளியூர் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

dpa07

உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நேற்றய தினம் (14) இடம்பெற்ற பனம் கைப்பணி பயிற்சியாளர்களின் கைப்பணி கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பனை அபிவிருத்தி சபையின் நெறிப்படுத்தலுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பனம் சார்ந்த கைப்பணிப் பயிற்சிகள் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்ற இச் செயற்பாடானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் பனைசார்ந்த தொழிற்துறை யாழ்.மாவட்டம் உள்ளிடங்கலான வடபகுதியிலும் மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாரிய முன்னேற்றத்தை காணமுடியும்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பனைசார்ந்த தொழிற்துறையுடன் ஒப்பிடும் போது தற்போது பனைசார்ந்த தொழிற்துறை வளர்ச்சி பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

எனவே, எனவே பனை சார்ந்த உற்பத்திகள் எதிர்காலத்தை நோக்கியதாகவும், நவீன வடிவமைப்புக்களை கொண்டமைந்ததாகவும் உள்ளூரில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

palmera-panai-1

இவ்வாறு முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே பனந்தொழிற் துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமன்றி நுகர்வோரின் தேவைகளை உணர்ந்து கொண்டும் சந்தையின் கேள்வியைக் கருத்தில் கொண்டும் உற்பத்திகள் அமையப் பெறுதல் அவசியமானது.

அத்துடன், நவீன தொழில்நுட்பத்தை வெளிக்கொணரும் அதேவேளை, அந்தந்தப் பகுதிகளின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையிலும், நீண்டகால பாவனைக்கேற்ற வகையிலும் தரமான உற்பத்திகள் செய்யப்படுதல் வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், எதிர்காலத்தில் பனைசார்ந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கும் அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கும் எனது பங்களிப்பும் ஒத்துழைப்பும் தொடருமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

dpa05

உரும்பிராய் இந்துக்கல்லூரியின் கற்பக விநாயகர் கலையரங்கில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் கிழக்கு, இணுவில் கிழக்கு ஆகிய பகுதிகளில் அமையப் பெற்றுள்ள பனம் கைப்பணிப் பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த 47 பேருக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்த அதேவேளை, தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

முன்பதாக பனைசார்ந்த கைப்பணிகள், கைவினைப் உற்பத்திகளுடன் உணவுசார்ந்த உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் அவை தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் 72 இடங்களில் பனை அபிவிருத்தி சபையினால் பனம் கைப்பணி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் லோகநாதன், பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் முகாமையாளர் கோபாலகிருஸ்ணன், வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் கணேசன், உரும்பிராய் இந்துக்கல்லூரியின் அதிபர் அருணந்தசிவம், ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், ஈ.பி.டி.பியின் வலி.கிழக்கு பிரதேச இணைப்பாளர் ஐங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts