தமிழர்களின் கண்ணீர் சிங்கள ஆட்சியாளர்களை வெகுவிரைவில் தூக்கி எறியும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
ஆசைப்பிள்ளையேற்றத்தில் 52 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள பெண்ணொருவரின் 50 ஏக்கர் காணியை படை முகாமிற்காகச் சுவீகரிக்கும் நோக்குடன் நிலஅளவைத் திணைக்கள அலுவலர்களினால் காணி அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, அளவீடு செய்யும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் காணியை தாங்கள் பணம் கொடுத்து வாங்கியதாகவே இராணுவத்தினர் சொல்லி இருந்தார்கள். அந்த அம்மாவின் கையில் சொந்த உறுதி இருக்கின்றது. அவர் தன் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்துள்ளர். அவர்களது குடும்பத்தில் இக்காணி இல்லாததால் அவர்கள் பிள்ளைகளின் திருமணத்திலும் பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
நிலஅளவையாளர்கள் இன்றைய தினம் இக்காணிகளை அளக்க முற்பட்ட போது நாம் எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தோம். அதனை அடுத்து அவர்கள் திரும்பி சென்றுள்ளார்கள்
இராணுவம், திரும்பி சென்ற நிலஅளவையாளர்களை மீளவும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அழைத்துவந்து, நிலஅளவையை மேற்கொள்ளக்கூடும். நாங்கள் தொடர்ச்சியாக எமது கண்டனங்களை தெரிவிப்போம். எங்களால் எவ்வளவு எதிர்ப்பை தெரிவிக்க முடியுமோ அவ்வளவு எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிப்போம்.
இந்தக் காணி உரிமையாளரான அந்த அம்மா இன்றைய தினம் கண்ணீர் விட்டு கதறி அழுது இருந்தார்கள். இந்த அம்மா மட்டுமல்ல நமது தமிழர் தாயகம் முழுவதிலும் தங்களது காணிகளை இராணுவத்தினருக்கும் சிங்கள குடியேற்றத்திற்காகவும் பறிகொடுத்துவிட்டு பலர் இன்று கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் அந்தக் கண்ணீர் நிச்சயமாக, எங்கள் காணிகளை ஆக்கிரமித்துள்ள இந்தச் சிங்கள ஆட்சியாளர்களை தூக்கியெறிய செய்யும். அவர்களுக்கான சரியான பாடத்தை இந்த கண்ணீர் வெகு விரைவில் கற்பிக்கும் என மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி
எனது காணியில் இராணுவத்தினர் வசந்தமாளிகை கட்டியுள்ளனர் – தம்பிராசா மகேஸ்வரி