தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், முக்கிய திட்டங்கள் குறித்து அதன் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் அணியின் 34 ஆவது மாநாடு எதிர்வரும் 19 ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியிலும் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 20 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சம்பந்தன் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார். மறுநாள் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் விசேட உரை நிகழ்த்துவார்.
இதன்போதே அவர் கூட்டமைப்பின் நகர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த எதிர்கால நடவடிக்கைகள், வடக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வடக்கு மாகாண ஆளுநராக சந்திசிறியின் மீள் நியமனம் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கி அவர் பேசுவார் என்றும், தென்னாபிரிக்க அரசின் நல்லிணக்க – சமாதான முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபாடு காட்டாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறனதாக இருக்கும் என்பது குறித்தும் அவர் பேசுவார் என்று கூறப்படுகின்றது.
இதேசமயம் ஈழத் தமிழர் தொடர்பான சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் அவர் கருத்துரைக்கலாம். இவை தவிர தமிழ்பேசும் சமூகம் மீது தொடர்ந்து அரசு கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை குறித்தும் புலம்பெயர் சமூகத்தவரின் பங்களிப்புக் குறித்தும் அவரது உரை நீண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.