Ad Widget

சிங்கப்பூரில் பீர் கேனை ரோட்டில் வீசிய தமிழருக்கு 9 மாதம் சிறை!

சிங்கப்பூர் நாட்டின் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரத்தில் பங்கேற்று பீர் கேனை ரோட்டில் வீசிய குற்றத்துக்காக தமிழகத்தை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவருக்கு, 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

siingapoor

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா என்ற பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம்தேதி, சாலை விபத்து ஒன்றை தொடர்ந்து, திடீரென கலவரம் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. 54 போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டனர். சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு சம்பவம் நடந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து 52 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்துவருகிறது. இதில், பழனிவேல் தாஸ்மோகன் (28) என்ற ஹோட்டல் அதிபருக்கு 9 மாத சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பழனிவேல், சிங்கப்பூரில் ஹோட்டல் மற்றும் பப்புகள் நடத்தி வருகிறார். கலவரம் நடந்த இரவு, ஒரு கும்பலோடு இவரும் சேர்ந்து ரேஸ் கோர்ஸ் ரோட்டில் சுமார் 45 நிமிடங்கள் நடந்து சென்றுள்ளார். அப்போது, பீர் கேன் ஒன்றை எடுத்து அதை சாலையில் வீசி எறிந்துள்ளார். இதற்குதான் 9 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 13வது நபர் பழனிவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னைக்கு நாளை வருகை தரும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷண்முகம், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்திக்க உள்ளார். அப்போது கலவர வழக்கில் தமிழர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts