பெரும் சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களும் சுயநலத்தோடு செயற்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களிற்கு உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து யாழ்.மாநகர சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கையொப்பமிடப்பட்ட கடிதத்தினை முதல்வரிடம் கையளித்தனர்.
அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்:-
உள்ளூராட்சி அமைசினான் வழங்கப்படும் சலுகைகளை வழங்குமாறு அமைச்சிடம் நாங்கள் நேரடியாக கேட்க முடியாது எம்மக்களால் பெரும் சவால்களிற்கு மத்தியில் அமைத்த மாகாணசபையினால் தான் அமைச்சிடம் வலியுறுத்தி பெற்றுத்தர முடியும்.
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் மாகாணசபையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுயநலம் படைத்தவர்கள் தமக்கு கீழ் செயற்படும் உள்ளூராட்சிசபைகள் தொடர்பில் எந்த நலனும் அக்கறையும் கொள்ளாதவர்கள் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றியமைக்கும் திட்டத்திற்கு நிதி வழங்கும் நிறுவனம் உரிய முறையில் நிதிவழங்காமையினாலேயே வேலைகள் தாமதமாகியுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
இதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அடுத்தவாரத்திற்குள் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்……
யாழ். மாநகர சபைக்குற்பட்ட வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றியமைக்கும் திட்டத்தின் கீழ் இங்குள்ள பல வீதிகளை மாற்றியமைத்திருக்கின்றோம். மேலும் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றியமைக்கவுள்ளோம். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தற்போது இணக்கப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டு அடுத்தவாரத்திற்குள் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஆகவே இந்தப் பணிகள் தாமதமாகியதற்கான பொறுப்புக்களை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.