மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதியான சூழல் நிலை நிலவி வரும் இந்தக்காலப் பகுதியில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியிருப்பது எமது இளம் சமூகத்தினர் மீண்டும் வழிதவறிப் போவதற்கான அத்திவாரமாகவே அமைந்துள்ளது. இந்நிலைமை முடிவுக்கு கொண்டுவர அக்கறையுள்ள அனைவரும் முன்வரவேண்டும் என அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக குடாநாட்டில் அரங்கேறிவரும் தனிப்பட்ட மற்றும் கூலிக்காக கொடூரமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியதோடு, முடிவு கட்டப்படவும் வேண்டியதுமாகும்.
இத்தகைய சமூக சீர்கேடான செயல்களையும், எமது மக்களை தேவையற்ற அச்சத்துக்குள்ளும், பதற்றத்திற்குள்ளும் தள்ளிவிடும் சம்பவங்களையும் தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களின் தொடர்ச்சியாக அண்மையில் கோண்டாவில் – உரும்பிராய் பகுதி இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட குழுச்சண்டை ஒரு மாணவனின் படுகொலையாக முடிந்தமையானது எமது இளம் சமூகம் மீண்டும் தடம் மாறிச் சென்று கொண்டிருப்பதையே கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்த நிலை தொடர்ந்து சென்றால் தமிழினம் கடந்த காலத்தில் கொடிய யுத்தத்தில் இழந்து போனவற்றை விட அதிகமானவற்றை மறுபடியும் இழக்க நேரிடும். எனவே இத்தகைய சம்பவங்களுக்கு முடிவுகட்ட சமூக அக்கறையுள்ள அனைவரும் தமது பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும்.
நீண்ட கால போராட்டத்தால் நலிவுற்றுப்போன எமது மக்கள் இப்போதுதான் ஒருவாறாக தமது வாழ்வாதாரத்தில் மீண்டுகொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சமூக சீர்கேடான இவ்வாறான செயல்கள் மீண்டும் ஒரு பேரழிவுக்கு நாம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சநிலை குடாநாட்டு மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது மிக வேதனையான விடயமாகும்.
ஒரு காலத்தில் கலாசாரத்துக்கு பெயர் போன யாழ்ப்பாணம் இவ்வாறான சம்பவங்களால் இன்று தலைகீழாக மாறிவருவதை எவராலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தமது பிள்ளைகளின் எதிர்காலம்பற்றிய எதிர்பார்ப்புகளுடன் பெற்றோர்கள் பல்வேறு துன்பங்களைச் சுமந்து பிள்ளைகளை வளர்க்கின்றனர். ஆனால் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதனால் அவர்களது குடும்பம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களது வாழ்க்கையும் மீண்டும் கறைபடிவதை யாராலும் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது.
தற்போது இந்தக் குழுச் சண்டியர்களை கட்டுப்படுத்த இராணுவம் தலையிடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் குடாநாடு முழுவதும் இராணுவம் குவிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. என்ற கவலை எமது மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
வாள்வெட்டுக்கள் போன்ற கோரச் செயல்களை செய்பவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து கடுமையான தண்டனைகளை பெற்றுக்கொடுத்தால் கொலை, கொள்ளைகளை குடாநாட்டில் தடுத்து நிறுத்தினாலேயே இங்கு இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும். இதற்கு பொதுமக்களும் தமது ஒத்துழைப்புக்களை துணிச்சலோடு வழங்கவேண்டும்.
பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் ஈடு செய்யமுடியாத இழப்புக்களைச் சந்தித்த எமது மக்கள் மீண்டும் ஒருதடவை பாதிக்கப்படுவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேண்டுகோளாக இருக்கின்றது. அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு நாங்களும் உங்களுடன் கைகோர்த்துக் கொள்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.