Ad Widget

ஊடகங்கள் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – தவராசா

ஊடகங்கள் உண்மைத் தன்மையோடு செய்திகளை வெளியிட வேண்டுமென்பதுடன் ஊடக தர்மம் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

thavarasa

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு தொடர்பில் கூறப்பட்ட விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டு இன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை இன்றைய தினம் வெளியிட்டுள்ளன.

எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
அத்துடன், யாழ் – கிளிநொச்சி இரணைமடு குடிநீர் திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் 23000 மில்லியன் ரூபாவை இலங்கை அரசு ஒதுக்கியுள்ள நிலையில் அதற்கான வட்டியையும் கட்டி வருகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளினதும் மக்களினதும் நலன்களுக்கு எதிராகவும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏனைய திட்டங்களையும் உள்வாங்கி அவை குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

இக் குடிநீர் திட்டத்தை நழுவ விடாது இம் மாவட்ட விவசாயிகளின் கருத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டுமென்பதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியுதவியினை மீளச் சென்றுவிடாது கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், யாழ்.குடாநாட்டிலுள்ள குளங்களில் நீரை தேக்குவதன் ஊடாக நிலத்தடி நீரை பாதுகாக்க முடியுமென்பதுடன் அதற்கான நடவடிக்கையினை சிறப்பாக ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் கிடைக்கப் பெற்ற இப்பேற்பட்ட நல்ல சந்தர்ப்பங்கள் எமது தவறான அரசியலால் தவறவிடப்பட்டுள்ளன.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான வரலாற்று தவறுகள் ஏற்படாத வகையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் பேருந்து சங்கத்திற்கும் இடையே ஒரு நல்லுறவை பேணும் வகையில் நேர அட்டவனையை மாகாண அரசு ஒழுங்கமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Related Posts