தமிழ் கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம் – வடமாகாண முதலமைச்சர்

vicky0vickneswaran‘கொழும்பு, வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்’ என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வரடங்கிய குழு, கைதிகளுக்கான பொங்கல் பரிசுகளையும் கையளித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டது.

அதன் பின்னர் அச்சந்திப்பு தொடர்பில் சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட முதலமைச்சர், ‘மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 70 பேரை மாத்திரமே சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சகலரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. ஏழு அல்லது எட்டுபேர் அடங்கிய குழுக்களாகவே இவர்களை நாம் சந்தித்தோம்’ என்றார்.

‘பெண் அரசியல் கைதிகள் நால்வரை சந்தித்தோம். அவர்களுக்கான வசதிகள் சிறைச்சாலைக்குள் செய்துகொடுக்கப்படுவதில்லை என்று எம்மிடம் முறையிட்டனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. அவர்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர், விளக்கமறியல் கைதிகள், வழக்கு தொடரப்பட்டோர் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டோர் என்று பல வகையான தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்.

அரசியல் கைதிகள் பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜனாதிபதியை கடந்த 2ஆம் திகதி நான் சந்தித்தபோது இந்த கைதிகளின் விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன். அவர், அரசியல் கைதிகளின் முழு விபரங்களையும் என்னிடம் கேட்டார். முழு விபரங்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை சந்திக்குமாறும் ஜனாதிபதி அன்று தெரிவித்தார்.

வழக்குகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற அரசியல் கைதிகள் தங்களுக்கு சட்டத்தரணிகளின் ஆதரவு போதுமானதாக இல்லையென்றும் சட்டத்தரணிகளின் அனுசரணையை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்’ என்றார்.

அத்துடன், ‘பெண் அரசியல் கைதிகளில் நால்வரை மட்டுமே சந்திக்கக் கிடைத்தது. அதிலொரு பெண் கைதியின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எவ்விதமான வருமானமும் இல்லாமையினால் சவர்காரம் கூட வாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை சுதந்திரமாகவே நாம் சந்தித்தோம். எந்தவிதமான இடையூறுகளும் இல்லை. அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டுமாயின் அமைச்சரின் அனுமதி தேவை. அமைச்சர் தற்போது நாட்டில் இல்லை’.’அரசியல் கைதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுகொடுக்க முயற்சிப்போம். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்தித்து விபரங்களை கொடுப்போம்’ என்று வட மாகாண முதலமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, காலியிலுள்ள பூஸா சிறைச்சாலைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts