வட மாகாணசபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்: கேபி

KP-kumaran-pathmanathanவட மாகாணசபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் கே.பி என்றழைக்கபடும் பத்மநாதன் அவர்கள்.

அவரது வாழ்த்துச் செய்தியில்

நீண்ட காலத்துக்குப் பிறகு எமது மக்கள் வடமாகாணசபை தேர்தல் ஊடாக முதல் தடவையாக வடக்கு முதல்வரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், எதிர்காலம் பற்றிய அச்சம் தரும் நிகழ்வுகளை அகற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் மக்கள் காத்திருக்கிறார்கள்.

முதல்வரும் உறுப்பினர்களும் அந்த நம்பிக்கையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீண்டகாலம் பல துன்பங்களை சுமந்து களைத்துப் போயுள்ள எம் மக்களுக்கு உடனடியாக பல அவசர தேவைகள் உள்ளன. இதனைச் செய்வதற்கு வட மாகாணசபைக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அரசாங்கத்துடன் நட்பு ரீதியான அணுகுமுறையின் ஊடாக எம் மக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்ற முடியும். முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதை உணர்ந்துகொண்டு ஜனாதிபதியின் முன்நிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டது இலங்கை அரசு, சகோதர சிங்கள மக்கள் மத்தியிலும் வரவேற்கத்தக்க முன்னுதாரணமாக உள்ளது.

எம் மக்களுக்கு சேவை செய்வதற்காக வட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் பின்தங்கிய கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்களின் துயர்துடைக்க முன்வருமாறு முதல்வர் விக்கினேஸ்வரனை கேட்டுக்கொள்கிறேன்.

வட மாகாணசபை முதல்வர், உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

த.செ.பத்மநாதன் (கே.பி)
செயலாளர்,
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் (NERDO)

Related Posts