Ad Widget

அரசின் யோசனைகளை ஆராய ஈ.பி.டி.பி குழு

daklasஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.தேவராஜின் தலைமையிலேயே இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயவும், அவைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பற்றி ஆராயவே இந்த குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முன்னாள் போராளிக்குழுக்களில் ஒன்றான அவரது கட்சி 13 ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், வன்முறைகளை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் யோசனைகளின் பிரகாரம் மாகாண சபைகள் இரண்டோ அல்லது அதற்கு மேல் ஒன்றாக இணைந்து செயற்படவுள்ள அதிகாரத்தை ரத்து செய்வதோடு, மாகாண சபைகளுக்கு சம்பந்தமுள்ள விடயங்கள் தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் போது, அனைத்து மாகாண சபைகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற சட்ட நிபந்தனையை திருத்தி, மேலதிக வாக்குகளின் அடிப்படையில் அவை நிறைவேற்றப்படலாம் என்று திருத்தங்களை மேற்கொண்டுவரவுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்கே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

இதைப்பற்றி கருத்து தெரிவித்த மாற்று கொள்கைகளுக்கான மையம் ‘நாட்டின் சட்ட யாப்பு அனைத்து குடிமக்கள் தரும் அதிகாரத்தின்பிரகாரம் அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும், ஆனால், தற்போதுள்ள திருத்தங்கள் ஜனநாய மரபுகளை மீறுவதாகவும் யுத்தத்தின் பின்னர் ஏற்படவேண்டிய புரிந்துணர்வை அழிப்பதாகவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளமை கூறிப்பிடத்தக்கது.

Related Posts