யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகள் தொடர்பில் இதுவரை எவ்வித பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தப் புதைகுழி தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடாத்துவதற்கு நீதி அமைச்சர் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பான பகுப்பாய்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து ஆரம்பகட்டமாக மீட்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகளில் பச்சிளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்கியிருந்தன.
இதேவேளை, இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணையொன்றை நடாத்துவதை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், குறித்த அகழ்வு மற்றும் விசாரணைப் பணிகளில் ‘மினசோட்டா விதிமுறைகள்’ (Minnesota Protocol) பின்பற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுருமார்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.