யாழில் வானிலை சீரின்மை: சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்காமல் திரும்பியது!

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தபோது, மழையுடனான காலநிலை நிலவியுள்ளது.

இதனால் விமானத்தைத் தரையிறக்குவதற்கான போதிய பார்வைத் தெளிவு இல்லாத காரணத்தினால் விமானம் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே, விமான ஓடுபாதையைக் குறிக்கும் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால், மழை, மேகமூட்டம், பனி மற்றும் காற்று மாசு ஆகியவற்றால் வானிலை தெளிவின்றி இருக்கும் வேளைகளில் ஓடுபாதையை அடையாளம் காண முடியாமல், போதிய பார்வைத் தெளிவின்றி விமானங்கள் தரையிறக்கப்படாமல் திரும்பிச் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Posts