உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, 2026ஆம் ஆண்டில் இலங்கையில் 25 பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 190 ஐ.நா. உறுப்பு நாடுகளின் சராசரி பொது விடுமுறை எண்ணிக்கை 13 ஆகும்.
இந்தப் பட்டியலில் மியன்மார் 30 விடுமுறை தினங்களுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் 29 விடுமுறை தினங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கம்போடியா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் 20க்கும் மேற்பட்ட பொது விடுமுறை தினங்கள் காணப்படுகின்றன.
மறுபுறம், சுவிட்சர்லாந்தில் தேசிய மட்டத்திலான பொது விடுமுறை தினம் ஒன்று மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்நாட்டின் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது எட்டு விடுமுறை தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
பொது விடுமுறை தினங்களின் எண்ணிக்கையில் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நான்கு தினங்களுடனும், உருகுவே ஐந்து தினங்களுடனும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.