கட்டுப்பாட்டை இழந்த கார் பல வாகனங்களை மோதி விபத்து!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன.

யாழ். நகர் பகுதியில் இருந்து தீவகம் நோக்கிப் பயணித்த கார், பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனையடுத்து, பண்ணை கடற்கரைப் பூங்காவுக்கு வருகை தந்திருந்தவர்களால் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

காரின் சில்லுகளில் ஒன்றிலிருந்து திடீரெனக் காற்று வெளியேறியமையினால் குறித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts