சிங்கப்பூர் அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வேலை அனுமதித் திட்டத்தின் கீழ் எட்டு தொழில் பிரிவுகளில் வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
உணவு சேவை, சமூக சேவை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அறிவிப்பின்படி, Non-Traditional Sources Occupation List (NTS-OL) எனப்படும் பட்டியலில் புதிதாக எட்டு தொழில் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இறைச்சி வெட்டுபவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொடர்புடைய பணியாளர்கள், உணவு மற்றும் பான விற்பனை நிலைய உதவியாளர்கள், சமையலறை உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர்கள், விமானப் பணிப்பெண்கள் மற்றும் விமானப் பணியாளர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பராமரிக்கும் கல்விப் பணியாளர்கள் (Educarers), ஆசிரியர் உதவியாளர்கள் ஆகிய தொழில்களுக்கு வெளிநாட்டவர்களைப் பணியமர்த்த முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புப் பெறத் தகுதியுடைய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இலங்கையுடன் பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள், மாதாந்தம் குறைந்தபட்சம் 2,000 சிங்கப்பூர் டொலர்கள் (S$2,000) நிலையான சம்பளத்தை வழங்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 8 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் இலங்கையர்கள் குறிப்பாக விருந்தோம்பல், உணவுச் சேவை, குழந்தைப் பராமரிப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
எனினும், இந்த அறிவிப்பு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதமோ அல்லது தானாகவே வேலை அனுமதி கிடைக்கும் என்பதற்கான உறுதியோ அல்ல. சிங்கப்பூரில் உள்ள வேலை வழங்குநர்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்து, தேவையான வேலை அனுமதியைப் பெற்ற பின்னரே வெளிநாட்டவர்களைப் பணியமர்த்த முடியும்.
உள்ளூர் பணியாளர்களைத் தேவையான அளவில் பணியமர்த்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தொழில்துறைகளுக்கு உதவும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கொள்கை விரிவாக்கம் 2026 மார்ச் மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதுடன், 2026 செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.