முச்சக்கரவண்டி விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (04.11.2026) காலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற உடனே அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அம்புலன்ஸ் இறுதிவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அம்புலன்ஸ் சேவையின் அலட்சியப்போக்கு குறித்துக் கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாகச் செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான வேறு இரு முச்சக்கரவண்டிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts