நீதிமன்றில் தன்னுயிரை மாய்க்க முயன்ற கைதி!!

திருகோணமலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில், புதன்கிழமை (28) அன்று சந்தேகநபரொருவர் கூர்மையான சிறு ஆயுதத்தால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டதில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இச்சம்பவத்தின் போது தடுக்க முற்பட்ட மேலும் இருவரும் லேசான காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைக்குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், ஐந்து சந்தேகநபர்களை திருகோணமலை தலைமையக பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்திருந்தனர். பொலிஸார் 48 மணித்தியாலத் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்களை புதன்கிழமை (28) அன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை தலைமையக பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்த சந்தேகநபரிடம், இவ்வாறான கூர்மையான கத்தி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை பிரதான நீதவான், துறைமுகப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts