திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி, 32 பேர் காயம்!

சீனாவின் தொலைதூர திபெத் பகுதியில் ஏற்பட்ட 7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி சின்ஹுவா (Xinhua) அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (22) உள்ளூர் நேரப்படி இரவு 10:33 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

பாதிப்புகள் குறித்தான மதிப்பீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பேரிடர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் நாக்கூ (Nagqu) பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 190 கி.மீ தொலைவிலும், பிராந்தியத் தலைநகரான லஹாசாவிற்கு (Lhasa) வடகிழக்கே 390 கி.மீ தொலைவிலும் உள்ள மலைப்பகுதியில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இரண்டாம் நிலை (Level-II) நிலநடுக்க பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பாகென் (Baqen) கவுண்டியில் உள்ள மாரு (Maru) நகரத்தில் அமைந்திருந்தது. நகர துணைத் தலைவர் லஹவாங் தாக்போ (Lhawang Dagpo) தெரிவிக்கையில், நகர அலுவலகத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் தெளிவாக உணரப்பட்டதாகவும், கட்டடச் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாகென் கவுண்டி பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் திபெத்தின் கிராமப்புற டிங்கிரி (Tingri) கவுண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 126 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts