செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் வழக்கின் இடைக்கால அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பான நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.