இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது.

அதே காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 114 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் குறித்து மொத்தம் 9,613 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.
இதில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 1,554 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்தப் முறைப்பாடுகளில் 169 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், எட்டு பாலியல் சுரண்டல் சம்பவங்கள், 40 சிறுவர் கடத்தல் தொடர்பான சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தலுக்குச் சிறுவர்களைப் பயன்படுத்தியது தொடர்பான 37 சம்பவங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை தொடர்பான 1,889 சம்பவங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதின்ம வயதினர் கர்ப்பமடைதல் தொடர்பான 51 முறைப்பாடுகள், சிறுவர் திருமணம் தொடர்பான ஒன்பது முறைப்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன.
அதே காலப்பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி வன்முறை தொடர்பான 196 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறை தொடர்பான 46 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.