கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவையை தொடர்ச்சியாக வலுப்படுத்த நடவடிக்கை!!

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘செயற்கை முறை கருக்கட்டல்’ சேவையைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான வளங்கள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்கை முறை கருக்கட்டல் சேவையின் முன்னேற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (08.10.2026) வியாழக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் பெண்கள் பராமரிப்புக்கான சிறப்பு மையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இணைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்கை முறை கருக்கட்டல் சேவையின் இதுவரையான முன்னேற்றங்கள் தொடர்பில் மருத்துவ நிபுணர் சி.ரகுராமன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் பின்னர், சேவையைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இச்சேவை வெறுமனே ஒரு மருத்துவச் சேவையாக மட்டுமன்றி, குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கையுடன் தொடர்புடைய சேவையாகவும் கருதி அதன் தரத்தையும் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

இலங்கையில் அரச மருத்துவமனையொன்றில் முற்றிலும் இலவசமாக செயற்கை முறை கருக்கட்டல் சேவை வழங்கப்படும் முக்கியமான சேவையாக கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இது முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் அத்தியட்சகர், கணக்காளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Posts