அரச துறையில் 1,12,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு!!

அரசத் துறைக்கு புதிதாக ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற தொழிற்சந்தையில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

“நாடளாவிய ரீதியில் வேலையின்மை வீதம் சுமார் 3.4 சதவீதமாகக் காணப்படும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அது இரட்டிப்பாக, அதாவது 6.7 சதவீதமாக நிலவுகிறது. வேலையின்மை என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல; அது ஓர் இளைஞனின் கனவு, ஒரு யுவதியின் எதிர்காலம் மற்றும் ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்பாகும். எனவே, யாழ். மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.

அதேபோல், தொழிலாளர் பங்கேற்பைப் பொறுத்தவரையில் ஆண்களின் பங்களிப்பு 68 சதவீதமாக இருக்கும் வேளையில், பெண்களின் பங்களிப்பு 32 சதவீதமாகவே உள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களின் திறமைகளைப் பொருளாதார வளமாக மாற்றுவது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது. வேலை தேடுபவர்களையும் தொழில் வழங்குபவர்களையும் ஒரே தளத்தில் இணைக்கும் பாலமாகவே இத்தொழிற்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தவொரு இளைஞரும் யுவதியும் தொழில் வாய்ப்பின்றி இருக்கக் கூடாது என்பதே எமது நோக்கமாகும்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கும் திறமைக்கும் பொருத்தமான வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்று, அவர்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய நிலையை அரசாங்கம் உருவாக்கும். இதற்காகவே அரசத் துறைக்கு 1,12,000க்கும் மேற்பட்டோரை புதிதாக இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளற்ற நிர்வாகத்தை உருவாக்குவதுடன், அரச வளங்களைச் சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதே எமது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts