இந்தியத் திரைப்பட நடிகை நமீதா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சௌத்திரி தம்பதியினர், வட மாகாண சுற்றுலாப் பணியகத்துக்கு வருகை தந்து வடக்கின் சுற்றுலாத்துறை முதலீடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தில் இடம்பெற்றது.
வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நடிகை நமீதா, வீரேந்திர சௌத்திரி மற்றும் சுற்றுலாத்துறைப் பணியகத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் வளர்ச்சிச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், வீரேந்திர சௌத்திரி – நமீதா குழுவினரால் வட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய முதலீடுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.