அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டி இந்தியாவுக்கு ஆடும் கடைசி போட்டியாக அமையும் என்றும் கிண்ணத்தை வெல்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கொஹ்லி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களாக 54 சதங்களை பெற்று சாதனை படைத்திருக்கும் கொஹ்லி, டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதோடு தற்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரமே ஆடி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கருக்கு (18,426) அடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களாக 14,914 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் 37 வயதாகும் கொஹ்லி, 2011இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கிண்ணத்தை வென்றதோடு 2023 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தார்.
அடுத்த ஒருநாள் உலகக் கிண்ண போட்டி 2027 ஒக்டோபர் மற்றும் நவம்பரில் தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. இது கொஹ்லியின் ஐந்தாவது உலகக் கிண்ணமாக அமையவுள்ளது.
‘என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு நான் ஆடும் கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும்’ என்று ஜீஸ்டார் ஒளிபரப்பு நிறுவனத்திற்கு கொஹ்லி குறிப்பிட்டார். ‘அனைத்து முயற்சியையும் செய்து உலகக் கிண்ணத்தை வெல்வதே முழுமையான இலக்காகும். அதற்கு நாள் முழுமையாக தயாராக உள்ளேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.