யாழில் இரு சிறுமிகளை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு முயன்ற முச்சக்கர வண்டி சாரதி கைது!

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரு சிறுமிகளை ஏமாற்றி, மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த முச்சக்கர வண்டிச் சாரதி இளவாளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இரு சிறுமிகள், அங்கிருந்து காரைநகர் செல்லும் நோக்கில் யாழ். பேருந்து நிலையத்தில் நின்றுள்ளனர். அப்போது அந்தச் சிறுமிகள் மீது சந்தேகம் கொண்ட சில முச்சக்கர வண்டிச் சாரதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்க முற்பட்டுள்ளனர். இதனை அவதானித்த மற்றொரு முச்சக்கர வண்டிச் சாரதி, தான் காரைநகர் அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுமிகளை ஏமாற்றி தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

காரைநகருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்ற சாரதி, நேராகச் சிறுமிகளை மாதகல் பிரதேசத்தில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட இரண்டாவது சிறுமி கையில் இருந்த பொருளால் சாரதியைத் தாக்கிவிட்டு கூக்குரலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாரதி, ஒரு சிறுமியை மட்டும் முச்சக்கர வண்டியில் ஏற்றியவாறு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அப்பகுதியில் கூடிய பொதுமக்களிடம் இரண்டாவது சிறுமி நடந்த விபரங்களைக் கூறியதை அடுத்து, உடனடியாக இளவாளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட பொலிஸார் ஒரு சிறுமியை மீட்டனர். சிறிது நேரத்தில், இரண்டாவது சிறுமியையும் பொலிஸ் நிலையத்தில் இறக்கிவிட முயன்ற முச்சக்கர வண்டிச் சாரதியையும் பொலிஸார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்றைய தினம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனைகளில் சிறுமிகள் உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகவில்லை எனக் கண்டறியப்பட்டாலும், முச்சக்கர வண்டிச் சாரதி துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் பொலிஸாரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts