கல்லூண்டாய் குப்பை மேட்டில் அத்துமீறி கழிவுகளைக் கொட்ட சென்ற வாகனங்கள்!!

யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் குப்பை மேட்டுப் பகுதியில் அத்துமீறி கழிவுகளைக் கொட்டுவதற்காக வாகனங்கள் சென்றடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கல்லூண்டாய் குப்பை மேடானது தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி மக்கள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப்பகுதியில் கழிவு மேடு மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

இதனால், குறித்த பகுதியில் தொடர்ந்து கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகப் பொதுமக்கள் பிரதேச சபை நோக்கிச் சென்றிருந்தனர்.

மக்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற சமயம் பார்த்து, கழிவுகளைக் கொட்டுவதற்காகச் சில வாகனங்கள் அத்துமீறி குப்பை மேட்டுப் பகுதிக்குள் நுழைய முயன்றன. இந்த வாகனங்களுடன் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் மயூரனும் சென்றிருந்தார்.

இதன் போது மாநகர சபை உறுப்பினர் மயூரனுக்கும் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் முரண்பாடும் ஏற்பட்டது.

பொதுமக்களின் தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்து, மாநகர சபை உறுப்பினர் மயூரன் மற்றும் கழிவுப் பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன.

Related Posts