ரயிலில் மோதி இரு பெண்கள் பலி!

இன்று (16) காலை 4.30 மணியளவில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாயும் அவரது உறவுக்கார மகளும் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் நோக்கி ரயிலில் பயணிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியுள்ளதில், தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்மூவரும் அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மதுகம பகுதியிலிருந்து வந்துள்ளனர்.

இவர்கள் ரயில் பாதையின் வழியே மிகவும் கவனக்குறைவாக நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.

உயிரிழந்த பெண்களின் சடலங்கள் தெற்கு களுத்துறை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts