மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

தினமும் இடம்பெறும் வீதி விபத்துகள் மற்றும் பாரிய விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் போது, போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அதிகப்படியான சோர்வு என்பன அதற்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், விசேடமாக டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்து சாரதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி இச்சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சேனாதீர மேலும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களின் சாரதி உரிமங்களை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மேலும், ஏதேனும் ஒரு பேருந்து சாரதி அதிக வேகத்தில், போட்டியிடும் வகையில், ஒழுக்கீனமாக அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தினால், அது தொடர்பில் 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகனத்தின் இலக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் காணொளிப் பதிவொன்றை அனுப்பித் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், தராதரம் பாராது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.

Related Posts