செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைகளுக்கு நீதிகோரி கிட்டுபூங்காவில் தமிழ்த்தேசியப்பேரவை பிரகடனம்!!

செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் இனப்படுகொலைக்கான சான்றுப்பொருட்களாக காணப்படுகின்ற நிலையில் தமிழனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணைப்பொறிமுறையொன்று தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என்று கிட்டு பூங்காவில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொதுமக்களும் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முற்பகல் கைலாசபதி ஆலயத்துக்கு முன்பாக ஒன்று கூடினர்.

அதனைத்தொடர்ந்து, செம்மணியில் வெளிவந்துள்ள எலும்புக்கூடுகளை அடைளாயப்படுத்தும் வகையில் கறுப்புடையுடனும் மண்டையோட்டு அடையாளத்துடனும் இளையோர் முன்னகர, செம்மணி படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், மக்கள் காணிகளில் படையினர், மக்களோ தெருக்களில், தமிழர் அடையாளங்களை ஆக்கிரமிக்கும் பௌத்தம், தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும், ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே, காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே, அநுர அரசே உங்களின் வாக்குறுதிகள் பொய்யா, எமது கடல் எமக்கு வேண்டும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆயிரக்கணக்கானவர்கள் கோவில் வீதி ஊடாக கிட்டு பூங்காவை நோக்கி பேரணியாக நகர்ந்தனர்.

இதில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார், மற்றும் ஏனைய தலைவர்களான செல்வராசா கஜேந்திரன், கனரத்தினம் சுகாஷ், நடராஜர் காண்டீபன், மதத்தலைவர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தையிட்டி, பலாலி,மயிலிட்டி, கேப்பாபிலவு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை இழந்துள்ளவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர், யுவதிகள், மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

அதனையடுத்து, நல்லூர் கிட்டுபூங்காவினை பேரணி வந்தடைந்து அங்கு தமிழ் மக்களின் நீதிக்கான குரல் எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான பிரகடனக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுசூரி மௌன அஞ்சலி இடம்பெற்றதை அடுத்து, சர்வதேச நீதிவிசாரணை உள்ளிட்ட பிரகனடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஷால் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐங்கரநேசன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வட,கிழக்கு அமைப்பின் தலைவி கனகரஞ்சினி, ஐ.பி.சி.நிறுவனத்தின் தலைவரும் வர்த்தகருமான கந்தையா பாஸ்கரன், வலி.வடக்கில் காணிகளை இழந்துள்ளவர்களின் சார்பிலும், கேப்பாபிலவில் காணிகளை இழந்துள்ள மக்களின் சார்பிலும் மூன்று பிரதிநிதிகளும் உரையாற்றியதோடு நன்றி உரையை தவபாலசிங்கம் வழங்கினார்.

இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

  • செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும்:
  • தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம் முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
  • அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை
  • வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.
  • தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் – இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பனவாகும்.

Related Posts