அதிப​ரை கொன்றுவிட்டு சுற்றுலா சென்ற மாணவர்கள்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 48 வயதான பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், திருட்டு நோக்கில் மாணவர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அதிபர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதைத் தொடர்ந்து அவரை கத்தியால் 27 முறை குத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக, மாணவர்களின் விடுதி பைகளில் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் அவர்களை எச்சரித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்குப் பின்னர் மாணவர்கள் பணத்துடன் கோவாவுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களிடமிருந்து 154,000 ரூபாய் பணம், இரத்தக் கறை படிந்த நாணயத்தாள்கள், திருடப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் ஐபோன் மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த மாணவர்கள் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடியிருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts