கிளிநொச்சியின் பளையில் விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய நபர் குறித்த மேலதிக விவரங்களை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெளியிட்டார்.

அக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் விசாரணைகளில் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர், இந்த சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சங்கீத் ஜயசேகர என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததும், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மோசடி தொடர்பான வழக்குகள் உட்பட மூன்று தனித்தனி குற்றவியல் வழக்குகளிலும் அவர் சந்தேகநபர் எனப் பெயரிடப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மருத்துவர் போல் ஆள்மாறாட்டம் செய்தும், முன்னதாக சில அமைச்சகப் பணியாளர்களுடன் இணைந்து ஆலோசகராகப் பணியாற்றியும் உள்ளார்.
அந்த நியமனங்கள் குறித்து அதிகாரிகள் தற்சமயம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த ஊடகச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் உள்ள அந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மாறாக, அந்த இடம் ஒரு விவசாயச் செய்கைக்கான பகுதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட இடத்துடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த எந்தத் தகவலும் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை.
சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில், பொதுமக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்த அந்தச் சந்தேக நபர் முயன்றுள்ளார்.
பயங்கரவாதத்திற்கோ அல்லது இன, மத ரீதியான பிளவுகளைத் தூண்டுவதற்கு இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கோ அரசாங்கம் இடமளிக்காது – என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை அரசாங்கம் முன்னதாகவே நிராகரித்திருந்தது.
குறிப்பிட்ட அந்த இடம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முக்கன்பம் பகுதியில் அமைந்துள்ளதாகவும், 1919-ஆம் ஆண்டில் வனப்பாதுகாப்புப் பகுதியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட நிலப்பரப்பில் அது அமைந்திருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, அரசு நிலத்தில் சட்டவிரோத சாகுபடி மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் இதுவாகும்.
இது தொடர்பாகப் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இடத்தில் காடு அழிப்பு மற்றும் அனுமதியற்ற கட்டுமானப் பணிகள் தொடர்பான சம்பவங்கள் குறித்து 2025-ஆம் ஆண்டு முதல் வனத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தியாகராசா குலதீபன் என்பவர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கற்றாழை மற்றும் காய்கறி சாகுபடிக்காக அப்பகுதி 20 ஏக்கராக விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டது.
அங்கு ஆடை உற்பத்தி நிலையம் ஒன்றை உள்ளடக்கிய மூன்று மாடி கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அந்த நபரை நிலத்தை விட்டு வெளியேறுமாறு கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும் அமைச்சர் கூறினார்.
இது புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் இயக்கம் தொடர்பான விவகாரம் அல்ல என்றும், மாறாக அரச நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், சாகுபடி மற்றும் மணல் அகழ்வு ஆகியவை தொடர்பான விவகாரம் என்றும் அரசாங்கம் நிலைப்பாடு கொண்டுள்ளது.