விற்பனை, களஞ்சியப்படுத்தல், விநியோகம் அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவற்றிற்காக தங்களிடம் வைத்திருக்கும் பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்தும் பற்றுச்சீட்டு, விலைப்பட்டியல் (Invoice) அல்லது பிற தொடர்புடைய ஆவணங்களை வர்த்தகர்கள் கட்டாயமாகப் பேண வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நினைவூட்டியுள்ளது.
CAA வெளியிட்டுள்ள 83ஆம் இலக்க பணிப்புரையின் கீழ், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பொருட்களை வழங்குவோர் மற்றும் வர்த்தகர்கள் தங்களிடம் உள்ள பொருட்களுக்கான எழுத்து வடிவிலான, அச்சிடப்பட்ட அல்லது மின்னணு பற்றுச்சீட்டு, பில் அல்லது விலைப்பட்டியல் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
அந்த ஆவணத்தில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்:
- பொருளை வழங்கியவரின் பெயர் மற்றும் முகவரி
- கொள்வனவு செய்யப்பட்ட திகதி
- கொள்வனவு விலை
- பொருளின் வகை
- பொருளின் அளவு / எண்ணிக்கை
- பொருந்தும் சந்தர்ப்பங்களில் Batch Number
இந்தப் பணிப்புரை 2022 ஏப்ரல் 27ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் மூலத்தை நிரூபிக்க முடியாத வர்த்தகர்கள், அதிகாரசபையின் சோதனைகளின்போது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என CAA தெரிவித்துள்ளது.
பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்துவதற்காக, அதிகாரிகள் வர்த்தகரிடமிருந்து பொருளை வழங்கியவர், மொத்த விற்பனையாளர் அல்லது விநியோகஸ்தர், இறுதியாக இறக்குமதியாளர் வரை விநியோகச் சங்கிலியை (Supply Chain) பின்தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம்.
சந்தை ஆய்வுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது தொடர்புடைய ஆவணங்கள் பரிசோதிக்கப்படலாம். விதிமீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
தேவையான சந்தர்ப்பங்களில், பொருட்கள் வழக்கிற்கான சான்றுப் பொருட்களாக (Case Productions) அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் முடியும்.
எனவே, வர்த்தகர்கள் தங்களது விற்பனை நிலையங்கள் அல்லது களஞ்சியங்களில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களுக்குமான பில்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் பிற விநியோக ஆவணங்களை பாதுகாப்பாகப் பேணுமாறும், தேவைப்படும் நேரத்தில் மின்னணு விலைப்பட்டியல்களையும் சமர்ப்பிக்கக்கூடிய வகையில் வைத்திருக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.