தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம்!!

தமிழக சட்டப் பேரவையில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜயால் முன்மொழிக்கப்பட்ட தனி தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று (10) தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

இது தொடர்பாக அவர் பேரவையில் பேசியதாவது,

”தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு சமரசம் செய்துகொள்ளாது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து, ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக திமுக சார்பில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்த பிறகு, இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இந்த தீர்மானத்திற்கு பிறகு தமிழகத்தில் ஆளுநர் பங்குபற்றும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts