காரைநகரில் நேற்று (03) இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் நேற்று இரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை மீறி முதியவர் மீது மோதியது.
இருப்பினும் முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலமானது காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.