இலங்கையில் கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்து வந்த கூட்டுறவுச் சங்கங்களை மறுசீரமைத்து அதனை நவீன தனியார் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரிவான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (31) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கூட்டுறவுத் துறையின் வீழ்ச்சிக்கு முறையான அரச தொலைநோக்குப் பார்வையின்மையும், முறையற்ற சட்டங்களும் பிரதான காரணங்கள் என்பதால் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கூட்டுறவுச் சங்க சட்டங்களில் அவசியமான சட்டத் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் அரசின் நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்துப் பங்களிப்பு செய்வதற்காக நடப்பு ஆண்டில் 500 மில்லியன் ரூபா செலவில் 40 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
ஒரு இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டொன் நெல்லை உலர்த்த முடியும் என்பதுடன், 40 இயந்திரங்கள் மூலம் நாளாந்தம் 800 மெட்ரிக் டொன் நெல்லை உலர்த்த முடியும். களஞ்சியசாலை மற்றும் அரிசி ஆலை வசதிகளைக் கொண்ட கூட்டுறவுச் சங்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்குள் குறித்த இயந்திரங்களை வழங்கி முடிக்கப்படவுள்ளன.
அத்துடன், நாட்டில் இயங்கி வரும் 302 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் உள்ள சுமார் 2000 கூட்டுறவு நகர (Co-op city) விற்பனை நிலையங்களை நவீன சந்தைப் போட்டிக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மாவட்டத்துக்கு ஒன்று என்ற ரீதியில் 25 மையங்கள் வாகன தரிப்பிடம், காய்கறி, பழங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் பெறக்கூடிய வகையில் சூப்பர் மார்க்கெட்டுகளாக மாற்றப்படவுள்ளன.
இதற்காக கூட்டுறவு அபிவிருத்தி நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா வரை குறைந்த வட்டி கடனுதவி வழங்கப்படுவதோடு, 10 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் 300 சிறிய கூட்டுறவு நகர விற்பனை நிலையங்களும் புதுப்பிக்கப்படவுள்ளன.
மேலும், தனியார் சூப்பர் மார்க்கெட்களுடன் போட்டியிடும் வகையில் கூட்டுறவு அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவும் வாடகைக்கு விடப்பட்டு, தற்போது சட்டவிரோதமாக பல்வேறு தரப்பினரால் கையாளப்பட்டுள்ள கூட்டுறவு சொத்துக்களை சட்ட நடவடிக்கை மூலம் மீளப்பெறவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் எல் – நினோ காலநிலை மாற்றங்களால் விவசாயம் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புக்களை சமாளிக்க சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் 6 அமைச்சர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டு நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னாயத்தங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.