2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் தகவலின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் கீழ் இயங்கும் 47 காவல் துறை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பணியகங்களுடன் இணைந்து விசாரணைகளை விரைவுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பான சூழலில் காணொளி மூலம் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒன்பது மாகாணங்களிலும் வீடியோ சாட்சியப் பதிவு அலகுகளை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான முக்கிய முறைப்பாடுகள்:
சிறுவர்கள் மீதான கொடூரம் – 1,100
பாலியல் துன்புறுத்தல் – 213
இணையவழி வன்முறைகள் – 112
சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்துதல் – 100
சிறுவர்களைக் சட்டவிரோதமாகக் கடத்துதல் – 99
சிறுவர் உழைப்பு – 82
கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் – 60
இளம் பருவக் கர்ப்பங்கள் – 40
தற்கொலை முயற்சிகள் – 13
சிறுவர் திருமணங்கள் – 5
சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.