மியான்மர் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரைச் சேர்ந்த அகதிகள், பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 500 இற்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற 02 படகுகள் சமீப நாட்களில் கவிழ்ந்திருக்கலாம் எனவும் ஐ.நா. அமைப்புகள் நேற்று தெரிவித்தன.
இந்த இரண்டு படகுகளும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டுள்ளன. அந்த படகுகளில் பெரும்பாலும் ரோஹிங்கியா சிறுபான்மை பயணிகள் இருந்துள்ளனர். அவர்களில் சிலர் பங்களாதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இசசம்பவங்கள் மற்றும் உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும், ஏற்படக்கூடிய பேரழிவு தரும் உயிரிழப்பு குறித்து அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயமும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
ஐ.நா. தரவுகளின் படி, கடந்தாண்டு அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் சுமார் 900 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர்.