போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் வீட்டிலேயே பரிசோதிக்க புதிய பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தங்களது பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை பெற்றோர் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கக்கூடிய பரிசோதனைக் கருவிகளை (Drug Testing Kits) சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த முன்மொழிவு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “ரடம ஏகட” (Ratama Ekata) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டு சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட தகவலின்படி, இந்த பரிசோதனைக் கருவிகள் மருந்தகங்கள் ஊடாக விற்பனைக்கு வழங்கப்படவுள்ளதுடன், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டிலேயே தனிப்பட்ட முறையில் பரிசோதிக்க வசதி ஏற்படுத்தப்படும்.
கூட்டத்தில், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி,
- பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துதல்,
- பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நாடளாவிய ஆய்வொன்றை மேற்கொள்ளுதல்,
- போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்துதல்
ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் சுமார் 70% பேர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இது பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனுடன், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழித்தொழித்தல், தடயவியல் (Forensic) பரிசோதனைகளை மேம்படுத்துதல், கடல் வழி போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் புனர்வாழ்வு தொடர்பான சட்டங்களை இறுதிப்படுத்துதல் குறித்தும் அரசு மீளாய்வு மேற்கொண்டது.