திருநெல்வேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகத்திற்கு அண்மையில் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் எழும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரக் கேள்விகளையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது பலரினதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அவரது பதிவின் விபரம் வருமாறு:
“நீண்ட நாட்களுக்குப் பிறகு திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்குச் சென்றிருந்தேன். வீட்டுச் சுவை, பாரம்பரிய உணவுப் பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் அணுகுமுறை என்பதால் எனக்கு அந்த உணவகம் மிகவும் பிடிக்கும்.
இன்று இலக்கஞ்சி அருந்தலாம் என்று கேட்டபோது, வழக்கத்தைவிட 20 ரூபாய் அதிக விலை கூறப்பட்டது. காரணம் கேட்டதற்கு, ‘இப்போது கண்ணாடிக் குவளைக்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் கப்பில் (Disposable Cup) மட்டுமே தருகிறோம். அதற்கான செலவுதான் இது’ என பணியாளர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு சுகாதாரப் பிரச்சினை காரணமாக உணவகம் மூடப்பட்டிருந்ததாகவும், மீண்டும் திறக்கப்பட்டபோது பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI), ஒருமுறை பயன்படுத்தும் கப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.”
எழும் கேள்விகள்: சுகாதாரம் எது?
இங்குதான் நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது: ஒருமுறை பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் கப் உண்மையில் சுகாதாரமானதா? அல்லது முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் குவளையா அதிக சுகாதாரமானதா?
-
சுற்றுச்சூழல் பாதிப்பு: ஒரு நாளைக்கு இந்த உணவகத்தில் மட்டும் சுமார் 1,000 முதல் 2,000 கப்புகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. தேநீர், கஞ்சி, பழக்கலவைகள் என தினமும் ஆயிரக்கணக்கான கப்புகள் குப்பையாக மாறுகின்றன.
-
புதிய சுகாதாரச் சீர்கேடு: இந்த பிளாஸ்டிக்/பவளக்கப்புகள் குப்பைமேடுகளில் சேரும்போது, மழைக்காலங்களில் அவற்றில் நீர் தேங்கி, டெங்கு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்கள் பெருகும் சூழல் உருவாகும். இது ஒரு சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்கப்போய், வேறொரு பெரிய சுகாதாரப் பிரச்சினையை உருவாக்கும் முடிவு இல்லையா?
-
பொருளாதாரக் கணக்கு: ஒரு கப்பிற்கு கூடுதலாக வசூலிக்கப்படும் 20 ரூபாய் என்றால், 2,000 கப்புகளுக்கு ஒரு நாளில் 40,000 ரூபாய் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்து, சுடுநீர் வசதி, தரமான நவீன சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் தனிப்பட்ட சுத்தப்படுத்தும் பணியாளர்களை நியமித்து, கண்ணாடிக் குவளைகளையே பாதுகாப்பாகப் பயன்படுத்தியிருக்கலாமே?
நிர்வாக அமைப்புகளின் சிந்தனை எங்கே?
பொது சுகாதாரம் என்பது உணவகத்தின் மேசையோடு முடிவடைவது அல்ல. அது கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளங்களின் பொறுப்பான பயன்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு விதிமுறையை நடைமுறைப்படுத்தும்போது அதன் உடனடி நன்மைகளை மட்டும் அல்லாமல், நீண்டகால சமூக, சுற்றுச்சூழல் விளைவுகளையும் அதிகாரிகள் மதிப்பிட வேண்டும்.
இது எந்த ஒரு அதிகாரியையும் குறைகூறுவதற்காக எழுதப்பட்டதல்ல. ஆனால், ஒரு அதிகாரி கூறிவிட்டார் என்பதற்காக, அதன் பின்னணியில் உள்ள தவறுகளை விமர்சனப் பார்வையுடன் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஏன் நம்மிடையே இன்னும் நிலவுகிறது?
விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மட்டும் சமூக முன்னேற்றம் இல்லை; அவற்றின் நோக்கம் மற்றும் விளைவுகளை ஆராய்ந்து கேள்வி கேட்கும் பண்பில்தான் உள்ளது. சிந்திக்கும் சமூகம்தான் நிலையான தீர்வுகளை உருவாக்கும்!