சீனாவின் முன்னாள் பணக்காரர் குவோ வென்குய்க்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஒரு காலத்தில் சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்’க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முன்னணி தொழிலதிபராக இருந்த குவோ வெங்குய், கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தப்பி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு தன்னை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர விமர்சகராக வெளிப்படுத்திக் கொண்ட அவர், சமூக ஊடகங்கள் ஊடாக பெருமளவிலான ஆதரவாளர்களைத் தன்வசப்படுத்தினார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம், மோசடி மற்றும் அச்சுறுத்தி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பான வழக்கை விசாரித்த நியூயோர்க் நீதிமன்ற நீதிபதி அனலிசா டோரஸ்,

தீர்ப்பளிக்கும் போது சீனாவில் ஜனநாயகத்தைக் கொண்டுவர விரும்பிய அப்பாவிகளை குறிவைத்து குவோ வெங்குய் இந்த பாரிய நிதி மோசடியை நடத்தியுள்ளார். அவர்களின் பணத்தைப் பறித்து, தனது ஆடம்பர வாழ்க்கைக்கு அவர் பயன்படுத்தியுள்ளார் என கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

மைல்ஸ் குவோ மற்றும் ஹோ வான் க்வோக் ஆகிய மாற்றுப் பெயர்களாலும் அறியப்படும் இவருக்கு, அவரது ஆதரவாளர்கள் நிறைந்திருந்த நீதிமன்ற அறையிலேயே இந்த தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க சட்டத்தரணி சீன் எஸ். பக்லி கருத்து தெரிவிக்கையில்,

தனக்குக் கிடைத்த சட்டபூர்வமான பல வாய்ப்புகளில் திருப்தியடையாமல், ஆயிரக்கணக்கான மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை குவோ தனது பேராசைக்காகப் பயன்படுத்திக் கொண்டார். புகழும் செல்வமும் யாரையும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மாற்ற முடியாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts