ஜேர்மனியில் தாய் மற்றும் சேய் நலன்புரி மையம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் அமைந்துள்ள தாய் மற்றும் சேய் நலன்புரி மையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தனது மகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புரிமை தொடர்பான குடும்பத் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹம்பேர்க் நகருக்கு அருகிலுள்ள ஸ்டேட் நகரின் டன்கர்ஸ்ட்ராஸ் பகுதியில் அமைந்துள்ள இளைஞர் நலன்புரி மையத்திலேயே நேற்று திங்கட்கிழமை (29) அந்த நாட்டு நேரப்படி மதியம் 12:10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் இந்த மையத்தின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, சந்தேக நபரான துப்பாக்கித்தாரியின் மூன்று மாதக் குழந்தையும் அதன் தாயும் அங்கிருந்த அலுவலக அறையொன்றில் இருந்த போதிலும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், இச்சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து லோயர் சாக்சனி மாநிலத்தின் உள்துறை அமைச்சர் டேனிலா பெஹ்ரன்ஸ் கருத்து தெரிவிக்கையில்;,

இந்த தாக்குதல் முற்றிலும் குடும்பப் பின்னணி மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடத்தப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் எவ்வித அரசியல் அல்லது பொருளாதார நோக்கங்களும் இல்லை. மிகவும் கொடூரமான முறையில் இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் ஜேர்மனியில் பிறந்து, ஹனோவர் நகரில் வசித்து வரும் 45 வயதுடைய துருக்கி பிரஜை என தெரியவந்துள்ளது.

தனது மகளின் பராமரிப்புரிமை குறித்து கலந்துரையாடுவதற்காகவே அவர் திங்கட்கிழமை இந்த மையத்திற்கு வருகை தந்ததாகவும், இவருக்கு முன்னதாகவே அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், துப்பாக்கிப் பயன்பாட்டுக்கான எவ்வித அனுமதியும் இவரிடம் இருந்திருக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது துப்பாக்கித்தாரி உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு இனி எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related Posts