போருக்கு முற்பட்ட நிலைமைக்கு மீண்டும் திரும்பும் எரிபொருள் நிலை!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போருக்கு முந்தைய நிலைக்கு எண்ணெய் விலை சரிவு கண்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டு எண்ணெய் விநியோகத்தின் தீர்க்கமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக இயல்புநிலைக்கு மாறிவரும் நிலையிலேயே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச குறியீடான பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 72.48 டொலர்களுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அது 72.63 டொலர்களாக இருந்தது.

பிராந்தியம் எங்கும் பரவிய இந்தப் போரினால் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியதை அடுத்து எண்ணெய் விலை உச்சம் பெற்றதோடு எரிசக்தி விலை பெரும் தளம்பலை சந்தித்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து எண்ணெய் விலை வேகமாக சரிய ஆரம்பித்தது.

இந்த புரிந்துணர்வு உடன்டிக்கையின்படி இரு தரப்பும் இறுதி உடன்படிக்கை ஒன்றை எட்ட 60 நாள் கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதோடு அந்தக் காலப் பகுதியில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகங்கள் இடம்பெறும் ஹோர்முஸ் நிரிணையை திறக்க ஈரான் இணங்கியது.

இரு தரப்பு பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் சந்தித்து முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் ஈரான் எண்ணெய் ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் தடை பகுதி அளவில் தளர்த்தப்பட்டது.

புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்பட்டது தொடக்கம் ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக கடல்சார் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனமான கிப்ளர் குறிப்பிட்டுள்ளது. நீரிணை வழியாக அண்மைய நாட்களில் பயணித்த கப்பல்களில் எண்ணெய், இயற்கை வாயு, உரம் மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிய கப்பல்கள் அடங்குவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த நீரிணை வழியான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தவறான புரிதல்களை தடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ‘தொடர்பாடல் இணைப்பு’ ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக மத்தியஸ்த நாடுகளான கட்டார் மற்றும் பாகிஸ்தான் வெளியிட்டிருந்த கூட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘அண்மைய நாட்களில் இந்த நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று அந்தப் பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் கப்பல்களுடன் பணிபுரியும் கடல் அபாய ஆலோசனை நிறுவனமான மரிஸ்கின் தலைமை நிர்வாக அதிகாரி டிமிட்ரி மனியடிஸ் தெரிவித்தார். அவரது நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக கடந்த திங்கட்கிழமையிலிருந்து சுமார் 80 கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. இது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பின்னர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானிய அதிகாரிகளின் அனுமதியுடன் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் வடக்கு கடற்பாதை வழியாகச் செல்ல முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போருக்குப் பின்னர் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் மற்ற தடைகளிலிருந்து பாதுகாப்பான தெற்கு கடற்பாதை வழியாகக் கப்பல்கள் பயணிக்க அமெரிக்க கடற்படையும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது என்றும் மனியடிஸ்; தெரிவித்தார்.

எவ்வாறாயினும் போருக்கு முன்னரை விடவும் அந்த நீரிணையை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே தொடர்ந்தும் உள்ளது. போருக்கு முன்னர் இந்த நீரிணையை தினசரி 100இற்கும் அதிகமான கப்பல்கள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கான கப்பல்கள் வளைகுடாவில் தொடர்ந்து காத்து நிற்கின்றன.

ஈரான் போர் ஆரம்பித்தபோது எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இப்போது அவை எவ்வளவு வேகமாக குறையும் என்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் சாதாரண பெட்ரோலின் சராசரி விலை, ஏப்ரல் மாதத்தில் ஒரு கெலனுக்கு 4 அமெரிக்க டொலரை எட்டிய பின்னர் தற்போது சுமார் 3.93 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. அது 2022 இற்கு பின்னர் பதிவான மிக உயர்ந்த விலையாக இருந்தது. இருப்பினும், இது இன்னும் போர் ஆரம்பிப்பதற்கு முந்தைய விலைகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகவே உள்ளது.

Related Posts