தாதியர் ஊழியர்கள் கடும் மன அழுத்தத்தில்!!

நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர் பற்றாக்குறை நிலவுவதால், தாதியர் ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கும் பணிச்சுமைக்கும் உள்ளாகியிருப்பதாக ஐக்கிய தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

Nurses take part in a ceremony to mark International Nurses Day in Colombo on May 12, 2020. (AFP/File)

இந்த தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் முறையான மற்றும் சாதகமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தவறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்கள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு விடயம்; வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறை. குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுத்து இந்த தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், சுகாதாரக் கட்டமைப்பு மேலும் வீழ்ச்சியடையும் என எச்சரித்திருந்தோம். ஆனால், அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு சாதகமான அணுகுமுறையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போது வைத்தியசாலைகளில் 14,000 இற்கும் மேற்பட்ட சிற்றூழியர் பற்றாக்குறையும், சுமார் 23,000 தாதியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே வைத்தியசாலைக் கட்டமைப்பு இயங்கி வருகின்றது. ஒரு தாதியர் இரண்டு பேரின் வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது.

இதனால் அவர்கள் தாங்கிக்கொள்ள முடியாத பணி அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்ட சம்பவத்திற்கும் இவ்வாறானதொரு பின்னணியே காரணமாகும். சில தாதியர்கள் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் நிசங்சலா பெர்னாண்டோ, தாதியர்களுக்கு தங்களோடு பணிபுரிபவர்களைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லை; சுருக்கமாகக் கூறின் தங்களைப் பற்றிக் கவனித்துக் கொள்ளவே நேரமில்லை.

நீண்ட காலமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்வதனாலேயே, தாதியர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தாதியர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்களுக்கான சேவையை எம்மால் நிறுத்த முடியாது. இதனால் மற்றுமொருவரின் வேலையையும் நாமே செய்ய வேண்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத மன அழுத்தம் காரணமாக, தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது.

எனவே, இதற்கு அரசாங்கம் உடனடியாக குறுகிய கால மற்றும் நீண்ட கால முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts