இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, 01 கிலோகிராம் 34 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 07 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 08 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபா பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.