யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டம் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16.06.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கெளரவ பிரதி அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இங்கு கூடியுள்ளதக்கவும், இவ் வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சினால் 827 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக 281 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடுகளுக்கு – அமைச்சரவை மூலம் ஒரு வீட்டிற்கு 1.50 மில்லியன் ரூபாவிலிருந்து அதிகரித்து 2.00 மில்லியன் ரூபாவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கும், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டீ.பி சரத் அவர்களுக்கும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டதுடன், கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில் நடைமுறைப்படுத்திவரும் வீடுகளுக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை மேலதிகமாக வழங்குவதற்கான கோரிக்கையையும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2018 மற்றும் 2019 இடைநடுவில் கைவிடப்பட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி வழங்குதல் தொடர்பான கோரிக்கையையும் முன்வைத்தார்.
அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் – காணி இல்லாதவர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாகவும், வீட்டுத்திட்டம் இல்லாதோர் விபரங்கள், வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள், எதிர்காலத்தில் தேவையான வீடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கெளரவ பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.