இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை ஆகக்குறைந்தது 25 சதவீதத்திலாவது அதிகரிக்குமாறு மருந்து நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி உயர்வு, கப்பல் கட்டணங்கள் மற்றும் மருந்து உற்பத்தி மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பாக உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நலின் கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில்,
மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை அத்தியாவசியமாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மருந்துத் தொழில்துறை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாந்த பண்டார குறிப்பிடுகையில், தற்போது அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 60 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டை நீக்கி, அவற்றின் விலைகளை ஆகக்குறைந்தது 7 சதவீதத்தாலாவது அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை நோயாளர்களுக்குத் தேவையான சுமார் 1,800 மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், சுமார் 250 வகைகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டில் 13 உள்நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக தற்போதைய விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.