அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன அக்கூட்டு முயற்சியில் பங்களிப்புச்செய்ய விரும்பினால், அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என அழைப்புவிடுத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன
இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
இருப்பினும் மேற்குறிப்பிட்டவாறு பிறிதொரு குழுவை நியமிப்பது தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒற்றுமை முயற்சியைப் பாதிக்கும் என அம்முயற்சியில் பங்கெடுத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன விசனம் வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து விளக்கமளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் இணைந்து புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிப்பது பற்றி ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே தாம் ஆராய்ந்து வருவதாகவும், அம்முயற்சியில் பங்கெடுக்குமாறு அப்போதே இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்தொடர் கலந்துரையாடல்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தற்போது 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அம்முயற்சியிலிருந்து தாம் ஒருபோதும் விலகப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
அதேபோன்று அரசியல் தீர்வு குறித்து ஆராயும் இக்குழுவின் செயற்பாடு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாக அமையுமே தவிர, அதனை ஒருபோதும் பாதிக்காது என்றும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அத்தோடு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிக்கும் செயன்முறைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கும் அதேவேளை, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு முயற்சியில் பங்களிப்புச்செய்ய விரும்பினால், அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் அழைப்புவிடுத்தார்.