வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரை வடக்கு மாகாண அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக வடக்கு மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பாக சாட்சிகளுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்படவில்லை என மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் 27 /2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மாவட்ட மட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களை தலைமை தாங்குவதற்கு குறைந்த அளவாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கு முடியும். இதன்படி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அவர் நியமிக்கப்படுகின்றார்.
அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மாகாணத்திற்கு அன்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என செயற்படுத்தப்படும். இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரை வடக்கு மாகாணத்துக்கு அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக குறித்த மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட வில்லை. வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பாக சாட்சிகளுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்படவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் நடக்கும் விவாதங்களில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை மரியாதை குறைவாக செயற்படுவது பற்றி எதுவும் பதிவாகவில்லை.
இந்தக் கூட்டங்களில் கதைக்கப்படுகின்ற விடயங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை.அத்துடன் அந்தக் கூட்டங்களில் பங்கேற்கின்றன பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்ற ஊடக செய்தியாளர்களுக்கு அதே நேரம் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதுடன் அரசாங்கதத்தினால் ஊடகங்களுக்கு தடை விதிக்கபடவும் இல்லை. சுற்றுநிருபங்களுக்கமைய அங்கு அறிக்கைகயிட ஊடகங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்றார்.