வடக்கு கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனுமொரு ஊழல் குறித்த முறைப்பாட்டுக்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? – அர்ச்சுனா

வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரை, வடக்கு மாகாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக குறித்த மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பான ஏதாவது ஒரு முறைப்பாட்டுக்காவது அமைச்சர் சந்திரசேகரன் இதுவரை நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27 / 2இல் விசேட கூற்றை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையிலும் நடைபெறுகிறது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பான முடிவுகளை பாராளுமன்ற ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒத்திசைவுடன் கலந்தாலோசித்து அதேநேரம் சமூக மட்ட மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்புடன் அந்தப் பிராந்தியத்தின் அபிவிருத்தியை மாத்திரமே கருத்தில் கொண்டு ஒழுங்கமைக்கப்படுகின்ற ஒரு கூட்டமாகும்.

மாவட்ட மட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களை தலைமை தாங்குவதற்கு குறைந்த அளவாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கு ஏதாவது ஒழுங்கு இருக்கிறதா?தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் வடக்கு மக்களின் ஜனநாயக பிரதிநிதியாக உரிய சுற்றறிக்கையின் பிரகாரம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரை வடக்கு மாகாணத்துக்கு அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக குறித்த மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பான ஏதாவது ஒரு முறைப்பாட்டிற்காவது அமைச்சர் சந்திரசேகரன் இதுவரை நடவடிக்கை எடுத்திருக்கிறாரா?

மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் நடக்கும் விவாதங்களில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை குறைவாக செயற்படுவது பற்றி தங்களுக்குத் தெரியுமா?அப்படியாயின் தங்களுடைய ஆளுமைக்குட்பட்ட பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டங்களிலே மற்றும் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் இதுவரை நடைமுறையில் செய்யப்பட்டிருக்கிறதா? உதாரணங்கள் இருந்தால் கூற முடியுமா?

இந்தக் கூட்டங்களில் கதைக்கப்படுகின்ற விடயங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கூடாது என்று உரிய அமைச்சர் தெரிவித்துள்ளாரா? இந்தக் கூட்டங்களில் பங்குபெற்றுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்ற ஊடக செய்தியாளர்களையும் அதே நேரம் சுதந்திர செய்தியாளர்களையும் தடை செய்துள்ளார்களா?

ஊடகங்களை தடை செய்கின்ற அரசாங்கம் ஒரு பொது மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் என்று தாங்கள் நம்புகிறீர்களா? இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு மேற்குறிப்பிட்ட தலைவருக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா? இவ்வாறான கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் காணொளிகளை பொதுமக்களுக்கு வழங்க வழங்க முடியுமா? என்றார்.

Related Posts